Tuesday, March 30, 2021

இதழகல் நேரிசை அகவல்....!!!


நின்னை நினைத்தே நின்றே னிங்கே
தென்னங் கீற்றில் தென்றல் காற்றாய்
அழகே சிலையே அழைத்த கணத்தில்
எழிலிடை யாட இழைந்த இசையாய்
அங்கயற் கண்ணியே அங்கே
தங்கத் தேராய்த் தங்கி னாலென்?
சியாமளா ராஜசேகர்

மங்காச் செல்வம் ...!!!

 இதழொட்டும் நிலைமண்டில ஆசிரியப்பா ....!!!

வளியாய் வருடும் மனத்தை மயக்கும்
களைப்பை விரட்டும் கவலை தீர்க்கும்
மழலை என்னும் மங்காச் செல்வம்
மழைபோல் பொழியும் வற்றா இன்பம்
வீட்டில் பெருகிட விளையும் சுகத்தைப்
பாட்டில் விதைத்தேன் பாசத் தோடே!!
சியாமளா ராஜசேகர்

ஞாயிறே போற்றி ...!!!

 விடியலைப் போற்றி பொழிப்பெதுகை அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா !!

****************************************************************
இரவில் சூழ்ந்த இருளை விரட்டக்
கருணை யுடனே கரங்கள் நீட்டி
ஒளியால் மெழுகி உளமது வியக்கக்
களையாய்க் கிழக்கில் களிப்புட னெழுந்தாய் !
உயிர்கள் வாழ்வில் உயர்வை யெட்டத்
தயக்க மின்றி தயைநீ புரிந்தாய் !
ஓயுமோ நின்பணி? ஓயா துழைக்கும்
நாயக! வானொளிர் ஞாயிறே வாழியே!!
சியாமளா ராஜசேகர்

Tuesday, January 12, 2021

வண்ணம் -123

 வண்ணம்: 123

****************
தான தத்த தான தத்த
தான தத்த தனதானா ( அரையடிக்கு )
மாம னுக்கு வாச மிக்க
மாலை யிட்டு மகிழ்வேனே
மாதெ னக்கு வீட ளித்து
வாழ்வு கிட்ட அருள்வானோ
நாம ணக்க யாழி சைத்து
நானு ரைக்க வரும்போது
நாவி னிக்க வாசை முத்து
நாடி யத்த னிடுவானோ
ஊமை யொத்த பேதை மெச்ச
ஊரை விட்டு வருவானோ
ஊடி நிற்கு மாறு சொக்க
ஊர டக்கி விடுவானோ
வீம முற்ற போது கட்டி
மீசை குத்த வணையானோ
மேனி தொட்டு மார்ப ணைக்க
வேறு சொர்க்கம் அறியேனே !!
வீமம் - அச்சம்
சியாமளா ராஜசேகர்

அம்மா ....காரிகை ..!!!

 அம்மா எனத் தொடங்கும் அகம், புறம் பற்றிய காரிகை...!!!

அம்மா ( அகம் )
அம்மா மனத்திலும் ஆசை வளர்த்தவென் ஆரணங்கே
சும்மா நினைக்க சுகத்தி லிதயந் துடிக்கிறதே
செம்மா துளைவாய்ச் சிரிப்பில் கவிழ்த்துச் சிறைபிடித்தாய்
எம்மா துமுனக்கீ டில்லை யறிந்தேன் எனதுயிரே!
அம்மா ( புறம்)
அம்மா மகனையும் அப்ப னுடனே அனுப்பிவைப்பாள்
தம்மின் உறுதியாய்த் தாய்நாடு காக்கத் தனித்திருப்பாள்
வம்போ வழக்கோ துவளாது தானே வகையறிவாள்
வெம்பும் நிலையிலும் வீரம் விதைக்க விழைபவளே !!
சியாமளா ராஜசேகர்

அம்மா ...!!!

 அம்மா

அம்மா எனவே அழைத்தால் உடனே அகமகிழ்வாள்
சும்மா விருப்பினுஞ் சோறு கொடுத்துச் சுமைபொறுப்பாள்
இம்மா நிலத்தில் இவள்போல் இதயம் எவர்க்குமிலை
தம்மா லியன்றதைத் தானாகச் செய்வாள் தயவுடனே !!
சியாமளா ராஜசேகர்

சந்தக் கலிவிருத்தம் ...!!!

 கண்ணாவென அழைத்தாலவன் கனிவாயுடன் வருவான்

பண்ணால்புகழ் பாடுங்குரல் கேட்டாலவன் மகிழ்வான்
கொண்டாடிடு முளம்பூத்திடக் குழலாலிசை பொழிவான்
விண்தாரகை யொளிவீசிட வெண்முத்தெனச் சிரிப்பான் !!
சியாமளா ராஜசேகர்