Thursday, May 17, 2018

மழை வருவதை ....!!!

மழைவருவதை விரிவிசும்பினில் கருமுகில்களும் விளம்பும்
***மரமசைந்திட வளிவருடிட மயில்நடமிட விரும்பும் !
முழங்கிடுமிடி முகிலுரசிட ஒலிசெவிகளை உரசும்
***முடுகிடுமொளி கிளைவரியுடன் தகதகவென மினுக்கும் !
தழைத்திடும்பயிர் பெயல்பொழிவினில் நிலம்நனைந்தது செழிக்கும் 
***தரணியிலுயிர் பிழைத்திடும்வழி கிடைத்திடமனம் மகிழும் !
கழனியில்பசும் பயிர்வளம்பெறும் வனமெழிலுற விளங்கும்
***கனிகுலுங்கிடும் மரக்கிளைகளில் இளங்கிளிகளும் குலவும் !!
கரைபுரள்நதி சலசலவென நுரைததும்பிட வோடும்
***கயல்களுமதில் நனியழகுடன் தவழலைகளில் நீந்தும் !
விரைவுடன்செலும் வழிநெடுகிலும் மலர்களைமரம் தூவும்
***விடிந்திடும்வரை மணம்பரவிட இருளுடன்கதை பேசும் !
நுரையொதுங்கிடும் கரையினில்மணல் வெளியினிலெழில் கொஞ்சும்
***நொடிக்கொருதரம் தலையசைத்திடும் செடிமயக்கிடும் நெஞ்சம் !
இரவினில்நதி யலைகளில்படும் பிறைநிலவொளி மின்னும்
***இதமளித்திடும் சிலிர்ப்பினிலுளம் மிகவிரும்பிடும் இன்னும் !!
சியாமளா ராஜசேகர்

கருவிற் சுமந்தவள் ...கடவுள் வடிவினள் ....!!!

அடக்க முடியுமோ அளக்க முடியுமோ
***அன்னை யன்பை அவனியில் ?
உடலும் தந்தவள் உயிரும் தந்தவள்
***உதிரப் பாலை ஈந்தவள் !
தொடக்க நாள்முதல் தன்னை வருத்தினும்
***சுமையைச் சுகமாய் நினைப்பவள் !
இடர்கள் களைந்தவள் இன்பம் கூட்டுவாள்
***என்றும் அவளுக் கீடிலை !
கருவிற் சுமந்தவள் கடவுள் வடிவினள்
***கனிந்த பாசத் துணையவள் !
இருளில் ஒளியவள் வெயிலில் நிழலவள்
***இதயம் நிறைந்த உணர்வவள் !
குருவாய்த் திகழ்பவள் குழந்தை மனத்தினள்
***குணத்தில் பரந்த கடலவள் !
வருத்தும் கவலைகள் அன்னை தேற்றிட
***மனத்தை விட்டே மறைந்திடும் !
பிள்ளைச் சிரிப்பினில் இதயம் சிலிர்ப்பவள்
***பெற்ற வயிறும் குளிர்பவள் !
அள்ளி யணைத்தவள் சொல்லும் ஆறுதல்
***அகற்றும் துன்பச் சுவட்டினை !
உள்ளம் மலர்ந்தவள் வாழ்த்தும் வாழ்த்தினில்
***உயரம் எட்டச் செய்பவள் !
கள்ள மறியாக் கருணை உளத்தினள்
***கண்கள் பனிக்கும் நினைக்கையில் !!
அன்னையர் தின வாழ்த்துகள் !!

காதலில் கருக்கொண்ட காப்பியங்கள் ....!!!

கண்ணனை மனத்தில் கணவனாய் வரித்துக்
***காதலி லுருகினாள் கோதை !
தண்டமிழ்ப் பாக்கள் அன்பினால் நெய்து 
***தன்னுளம் காட்டினாள் பேதை !
பண்பொடு நாளும் பக்தியும் செய்து
***பைங்கிளி பாடினாள் பாவை !
கண்ணனின் மீது தூயவள் கொண்ட
***காதலே அவளது கீதை ...!!!
தேன்மொழி யாலே பாசுரம் பாடித்
***திருவடி நொடிதொறும் நினைந்தாள் !
மான்விழி யாளும் மாலைகள் தொடுத்து
***மன்னனுக் கதனையே படைத்தாள் !
தான்முதற் சூடிப் பார்த்ததைப் போட்டுத்
***தாமரைப் பூமுகம் சிவந்தாள் !
வான்பிறை போலும் நுதலினை உயர்த்தி
***மாதவன் எழிலினை வியந்தாள் !!
கருமுகில் வண்ணன் கைத்தலம் பற்றக்
***கனவினில் பூத்தது மாலை !
விருப்புடன் மங்கை விழியுயர்த் திடவே
***விரிந்தது தேன்மலர்ச் சோலை !
அருகினி லிருந்து செய்திட நினைத்தே
***அன்புடன் கனிந்தது சேவை !
திருமணக் கோலம் விழிகளில் கண்டு
***திருவுளம் சிலிர்த்தனள் பாவை !!
சந்ததம் நெஞ்சில் கண்ணனை நினைத்துத்
***தையலும் மையலில் கரைந்தாள் !
சிந்தையுள் பூத்த காதலை அவள்தம்
***செந்தமிழ்ப் பாக்களில் நிறைத்தாள்!
விந்தையாய் ஊரார் பார்த்திடும் போதே
***மின்னலாய் ஐக்கிய மானாள் !
அந்தமிழ்ப் பெண்ணாள் அரங்கனை யாண்டாள்
***அன்பினா லொன்றுகலந் தாளே !
சியாமளா ராஜசேகர்

கொஞ்சிக் குலவும் குளிர்ந்து ...!!!

நெஞ்சில் சுமந்த நினைவுகளின் சாரலில்
பஞ்சாய் மனமும் பறக்கும் முகிலிடையில்
சஞ்சல மின்றித் தனிமை யினிமையென
மஞ்சள் நிலவுடன் மௌனக் கதைபேசி
வஞ்சி யவளும் வரும்வரைக் காத்திருந்துக்
கொஞ்சிக் குலவும் குளிர்ந்து.
(ஒரு விகற்ப பஃறொடை வெண்பா)
சியாமளா ராஜசேகர்

உன்னுள் கலந்த உறவு ...!!!

உன்ற னுளத்தி லுயிராய்க் கருதியெனை
அன்பா யரவணைத்(து) ஆசையாய்த் தோள்சுமந்தாய் !
கன்ன மிரண்டில் கனிவுடன் முத்தமிட்டாய் !
புன்னகை யோடு பொறுத்தாயென் சேட்டைகளை !
பொன்றாத் துணைநீயே! பூவுலகி லென்றும்நான் 
உன்னுள் கலந்த உறவு .
சியாமளா ராஜசேகர்

தீம்தீமென ஆடும் ...!!!




தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தீமென ஆடும் 
***தீந்தமிழினில் வான்முகிலொடு தேன்பாசுரம் பாடும் !
பூம்பொழிலினில் மான்விழியொடு சாய்ந்தாடிடும் போது
***பூந்தளிர்விரல் தீண்டலில்முகம் மூன்றாம்பிறை யாகும் !
பாம்பெனநெளி கூந்தலில்மணம் தேன்பூவென வீசும் 
***பாங்கொடுமர ஊஞ்சலிலவள் சேர்ந்தாடிடும் நேசம் !
சோம்பலிலவள் ஐம்புலன்களும் வேண்டாமென நாணும்
***தோன்றியநிசி நாண்மதியொடு தூங்காநிலை தானே !

(கூவிளங்கனி கூவிளங்கனி தேமாங்கனி தேமா )

Tuesday, May 8, 2018

அடுக்குத் தொடரில் விடியற்காலை ...!!!


விடிய விடிய ஒளிர்ந்த நிலவை 
போ போவென அனுப்பும் வானம் 
வா வாவெனக் கதிரை அழைக்க 
அலை அலையாய் முகில்க ளிடையே 
பைய பையத் தலையைத் தூக்கி 
எட்டி எட்டிப் பரிதி பார்க்க .... 

வண்ண வண்ண மொட்டுகள் விரியும் 
முத்து முத்துப் பனித்துளி சிரிக்கும் 
சுற்றிச் சுற்றி வண்டுகள் பறக்கும் 
கொஞ்சிக் கொஞ்சிக் கிளிகள் பேசும் 
சொட்டுச் சொட்டாய்ச் சாரல் தூவி 
வாழ்க வாழ்கவென விடியலை வாழ்த்தும் !! 

சியாமளா ராஜசேகர்