Tuesday, November 7, 2017

வண்ணமயில் மீதேறி வா !

விழிதிறந்து பார்த்தால் வினையாவும் தீரும்
எழில்வடி வேலா எனையாள்! - வழிகாட்ட
வண்ணமயில் மீதேறி வள்ளியுட னாடிவந்தால்
கண்குளிர்வே னுன்கோலம் கண்டு.

ஒத்தையில போறவளே ....!!!


ஒத்தையடிப் பாதையிலே 
***ஒத்தையில போறவளே 
பத்திரமா போய்வாடி 
***பால்நிலவு வருமுன்னே !
அத்தமவன் நானிருக்கேன் 
***அச்சத்த விரட்டிவிடு 
சத்தியமாத் துணையிருப்பேன் 
***சாகுமட்டும் உன்னுடனே !!

ஆத்தோரம் போகாதே 
***அலைவந்து முத்தமிடும் 
காத்துவந்து மேனிதொட்டுக்  
***காதலுடன் கதைபேசும் !
வாத்துகளும் நீந்திவந்து 
***வரவேற்கக் காத்திருக்கும் 
சேத்துக்குள் தாமரையும் 
***செவ்விதழால் சிரித்திடுமே !!

நாணமுடன் நீநடக்க 
***நாத்துகளும் தலையசைக்கும் 
நாணல்புல் கரையினிலே 
***நளினமுடன் நடனமிடும் !
ஆணவத்த விட்டுவிட்டு 
***அழகுமயில் ஆடிவரும் 
வீணான பயமெதற்கு 
***விரைந்துவாடி  என்குயிலே !!

பட்டெடுத்து வந்துனக்குப்
***பரிசமிட நாள்பார்ப்பேன் 
பொட்டுவச்சிப் பூமுடிச்சிப்
***புதுப்பெண்ணா உனைரசிப்பேன் !
கொட்டுமழை நாளினிலும் 
***குடையின்றி நடந்துவந்து 
கட்டிவெல்லத் தங்கமுனைக் 
***கண்குளிரக் காண்பேனே !!

பூவனமும் உனைக்கண்டால் 
***பூரிப்பில் குளிர்ந்துவிடும் 
தேவதையே உன்னன்பில்
***சிக்குண்டுத் தவிக்கின்றேன் !
தாவணியில் மயக்குறியே 
***தாகத்தைத் தூண்டுறியே
ஆவணிக்குள் தாலிகட்டி 
***ஆசையுடன் அணைப்பேனே !!

சியாமளா ராஜசேகர் 


தேங்கிய நீரால் ....!!!

வாங்கிய மனையில் மாளிகை கட்டி 
***மகிழ்வுடன் வாழ்திருந்தார் ! 
தேங்கிய நீரில் தெப்பமாய் மிதக்கச் 
***சிந்தையுங் கலங்கிவிட்டார் !
நீங்கிடு மோயிந் நிலையென அவர்தம் 
***நிம்மதி யிழந்துநின்றார் ! 
தாங்கொணாத் துயரால் தவித்தவர் மனம்தம் 
***தவற்றினை உணர்ந்ததின்றே !

Monday, November 6, 2017

மலைப்பயணம் !

மலைச்சாலை வழியெங்கும் சிற்றருவி கொட்டும் 
****மகிழுந்தில் மலைப்பயணம் மனமகிழச் செய்யும் !
அலையலையாய் மேகங்கள் உடலுரசிச் செல்லும் 
****அழகழகாய் உறைபனியும் உள்ளத்தை வெல்லும் !
குலைநடுக்கு  மேயதல பாதாள பள்ளம் 
****குண்டுகுழிச் சாலைகளில் பெருகியோடும் வெள்ளம் !
தொலைத்துவிட்டேன் என்னிதயம் இயற்கையிடம் தஞ்சம் 
****தொலைதூர மிருந்தாலும் நினைவுகளைச் சுமந்தே !!

Sunday, November 5, 2017

தேவனே சொல்வாய் நீயே !!



கொட்டிய மழையா லெங்கும்
***கொசுக்கடித் தாள வில்லை !
விட்டிடு போது மென்றால்
***விண்மழை நிற்க வில்லை !
மட்டிலா இன்ப மீயும் 
***மழையினால் துன்பம் வந்தால்
திட்டிடத் தானே தோன்றும்
***தேவனே சொல்வாய் நீயே !

வரமே !

பனிமலை கண்ட பரவசத் தாலே
***பனித்திடும் விழிகளும் விரியும்!
நனியழ கோடு நிமிர்ந்தநற் கோலம்
*** நனைத்திட மனமதும் மயங்கும்!
புனிதமாய்த் தோன்றி விடியலின் ஒளியில்
***பொன்னிற மாயது மின்னச்
செனித்திடும் அமைதி அகத்தினில் நிறையச்
***சிலிர்த்திட வைத்திடும் வரமே!

உதித்தது கவிதை !


சிவந்திடும் இருண்ட வானில்  
***சித்திரம் தீட்டி னாற்போல் 
தவழ்முகில் அலைகள் மேலே 
***தகதக வென்றே பொன்னாய்க் 
கவின்மிகு கதிரோன் மின்னும் 
***காட்சியைக் கண்ட போழ்தில் 
உவகையில் உள்ளம் பூக்க 
***உதித்தது கவிதை நன்றே !!